| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.66 திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் | 
| தாயவனை வானோர்க்கும் ஏனே ருக்குந் தலையவனை மலையவனை உலக மெல்லாம்
 ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை
 அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
 மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
 மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
 தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 1 | 
| உரித்தானை மதவேழந் தன்னை மின்னார் ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
 தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
 தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
 அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
 கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
 தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 2 | 
| காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக் காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
 வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனை
 மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத
 ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை
 இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
 சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 3 | 
| தலையானை எவ்வுலகுந் தானா னானைத் தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா
 நிலையானை நேசர்க்கு நேசன் றன்னை
 நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
 மலையானை வரியரவு நாணாக் கோத்து
 வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த
 சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 4 | 
| மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும்
 பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்
 பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்
 பையானைப் பையரவ மசைத்தான் றன்னைப்
 பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்
 செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 5 | 
| துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத் தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
 நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி
 நிற்பனவும் நடப்பனவு மாயி னானை
 மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை
 அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்
 சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 6 | 
| மறையானை மால்விடையொன் றூர்தி யானை மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்
 இறையானை என்பிறவித் துயர்தீர்ப் பானை
 இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்
 உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம்
 என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த
 சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 7 | 
| எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில் இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்
 பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்
 பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்
 கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்
 குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
 செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 8 | 
| அளியானை அண்ணிக்கும் அன்பால் தன்னை வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
 துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
 சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
 கெளியானை யாவர்க்கு மரியான் றன்னை
 இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறல்
 தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 9 | 
| சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச் சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்
 பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்
 பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை
 ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச
 அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்
 தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
 சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |